அமரர் சின்னத்தம்பி சுப்பிரமணியம். என்னுடைய ஒன்பது வயதில், யாழ் இந்து ஆரம்ப பாடசாலை முடிந்து, யாழ் இந்துக் கல்லூரியில் எனது தந்தையாரின் வருகைக்காகக் காத்திருக்க வேண்டிய தருணங்களில், எனக்கு அறிமுகமானவர். எப்போதும் அவரது முகத்தில் பட்டொளி வீசும் புன்னகையும், கனிவுடன் மென்மையாகப் பேசும் வார்த்தைகளும் என்றும் எனக்கு ஆதரவாக இருப்பதை உணர்ந்து அவருடன் என் மனம் நட்புப் பாராட்ட ஆரம்பித்தது. யாழ் இந்துக் கல்லூரி வளாகத்தினுள் மட்டுமல்ல, அப்பாவின் துவிச்சக்கர வண்டியில் அமர்ந்து வீடு திரும்பும் வழியில், நாவலர் வீதி மணிக்கூட்டு வீதிச் சந்தி வரை கூட வருவார், எனது தந்தையாருடன் நெருக்கமான நட்பைப் பேணியவர், அவருடைய சொந்த வாழ்வில் நடக்கும் பல்வேறு விடயங்களைப் பற்றி ஒழிவுமறைவின்றிப் பேசுவார், அவர்களது பேச்சுகளின் சில பகுதிகள் இன்றும் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது. எனது பன்னிரண்டாவது வந்தில் யாழ் இந்துக் கல்லூரியில் முதன்முதலில் காலடி வைத்த ஆரம்ப நாள்களில், பல தேவைகளுக்காக அதிபரின் காரியாலையத்துக்குச் செல்ல வேண்டிய தருணங்களில் எல்லாம், தம்பி என்ன விசயம் எண்டு கேட்டு, அந்த விசயத்தை யார் மூலம் தீர்த்து வைக்க முடியும் என்பதையும் சொல்லி, அதற்கான ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தைகளை உரியவர்களிடம் எனக்காக கோடிட்டுக் காட்டுபவர். அவரை எப்போதும் நட்புடன் அணுகிய ஞாபகங்கள் எனக்குள் இருக்கிறது மட்டுமல்ல, எம்முடைய நண்பர்கள் பலரும் இதே போல அவரவர் அனுபவங்களையும் எம்மிடம் பகிர்ந்த போதுதான், அமரர் சி.சுப்பிரமணியம் ஐயா அவர்களின் மனமும் அவருடைய உயர்ந்த குணமும் அவருடைய சேவை மனப்பாங்கையும் புரிந்து கொள்ள முடிந்தது. “வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு” என்கிற குறளுக்கு அமைய அவருடைய உள்ளத்தின் உயர்வைப் போலவே அவருடைய வாழ்வும் அமைந்திருந்தது என்பதையும் கண்கூடாக கண்டேன்.
Dear Mahesh and family , pls accept my deepest condolences. RIP