மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட சொல்லின் செல்வர் செல்லையா ராஜதுரை அவர்கள் 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் காலமானார்.
அன்னார், தாயகத்தில் அசைக்க முடியாத தலைவர்களில் ஒருவராகவும், கிழக்கு மாகாணத்தைில் தனிப்பெரும் ஆளுமை மிக்க தளபதியாகவும் இருந்தவர். சொல்லின் செல்வர், தமிழ் ஆசான் என்று அழைக்கப்பட்டவர் செல்லையா ராஜதுரை அவர்கள். தந்தை செல்வா அவர்களின்மேல் மிகப்பெரிய பற்றுக்கொண்டவர். ஆரம்ப காலத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழரசுக்கட்சியை பட்டி தொட்டியெங்கும் கட்டியெழுப்பியவர். மேடைப்பேச்சுக்களிலும் சொற்பொழிவுகளிலும் நிகரற்ற சொல்வேந்தர் அவர், ஆரம்பகாலங்களில் கிழக்கு மாகாணத்தை தன் கைப்பிடிக்குள் வைத்திருந்தவர். தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் தன்னை வருத்தி உழைத்தவர். கிழக்கையும் தாண்டி வடக்கிலும் அவர் சொல்லாற்றலால் பலரையும் தன் பக்கம் ஈர்த்தெடுத்தவர் ஐயாசெல்லையா ராஜதுரை அவர்கள்.
இவர் அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருக்கு மிக நெருக்கமாக இருந்தவர். சென்னையில் வசித்து வந்த செல்லையா ராஜதுரை அவர்கள் வயதான நிலையில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்து சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 98.
இலங்கையின் மட்டக்களப்பு தொகுதியில் 1956 - 1977 வரை தொடர்ந்து எம்.பியாக இருந்துள்ளார். இலங்கை தமிழ் மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியவர் செல்லையா ராஜதுரை அவர்கள். இலங்கையிலேயே தலைசிறந்த பேச்சாளராக இருந்து வந்த ஐயா செல்லையா ராஜதுரை அவர்கள் 'சொல்லின் செல்வர்' என்றும் அழைக்கப்படுகிறவர்.
கடந்த 1956ஆம் ஆண்டு முதன் முதலாக அவர் மட்டக்களப்பு தொகுதியில் எம்பியாக போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். நாடாளுமன்ற உறுப்பினராகி அதன் பிறகு தொடர்ந்து 1977ஆம் ஆண்டு வரை அதே தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மட்டக்களப்பு மாநகர சபையின் முதல் மேயர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை முடித்தார். பின்னர் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் மேல்நிலை படிப்பை முடித்தார். ஊடகவியலாளராகவும் பணியாற்றி உள்ளார். ஒருகாலத்தில் தமிழர்களின் ஏகபோக உரிமைப்பத்திரிகையாக திகழ்ந்த சுதந்திரன் என்ற பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் ஐயா ராஜதுரை பணியாற்றி உள்ளார்.
உலகெங்கிலும் வாழும் தமிழர்தம் மனங்களில் வாழும் சொல்லின் செல்வர் செல்லையா ராஜதுரை அவர்களின் மறைவிற்கு RIPBOOK, சினி உலகம் இணையதளங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர் நலம் விரும்பிகள் அனைவரின் துயரிலும் பங்கெடுத்துக்கொள்கிறது.
சொல்லின் செல்வருக்கு அஞ்சலி
மட்டக்களப்பின் மைந்தரே,
மண்ணில் பிறந்த மாமனிதரே!
சொல்லின் செல்வரே,
தமிழாசானே, விடைபெற்றீரோ?
கிழக்கின் தனிப்பெரும் ஆளுமையாய்,
தளபதியாய் இருந்தவரே;
தமிழுக்காய் வாழ்ந்தவரே.
தமிழரசுக்கட்சியை வேரூன்றச் செய்தீர்,
பட்டிதொட்டி எங்கும்;
பேச்சுக்கலையின் நிகரற்ற சொல்வேந்தர்,
சொல்வன்மையால் ஈர்த்தீர் எங்கும்.
தமிழுக்காய் தன்னைத் தந்த ஐயா!
உம் புகழ் என்றும் நிலைக்கும்.
விண்ணே சென்றாலும்,
தமிழ் உள்ளங்களில் வாழ்வீர்.