
சுவிஸ் Männedorf ஐப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Meilen ஐ வதிவிடமாகவும் கொண்ட சற்குணராஜா பவீந் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
நல்கலை யாவும் கற்றுத் தெளிந்தவன்- செங்காளன்
பல்கலைக் கழகத்திலும் வென்று மிளிர்ந்தவன்
சொல்லிலும் செயலிலும் சிறந்த வல்லவனை
பொல்லா விதி வந்து கூட்டிச் சென்றதெங்கே?
பவீந் எனப் பெயர் சூட்டிப் பிறந்தாய்
கவின்மிகு உலகைவிட்டு ஏன் நீ மறைந்தாய்?
இளவயது மிடுக்கோடு நேற்றும் நீ நடந்தாய்! இன்று
அழவைத்து எமைவிட்டு எங்கு நீ கடந்தாய்?
பெற்றோருக்கு எப்போதும் பெருமை தேடித் தந்தாய்
கற்றோர் வியக்கும்படி காலமெலாம் வளர்ந்தாய்!
நற்றவத்தோர் யாவரும் போற்றும் பொன்மகனே
போன இடம் எங்கே என்று நீ புகல்வாய்?
மனமோ என்றும் மாசில்லாத் தங்கம்- எங்கள்
மனடோர்ப் பள்ளியில் பவீந் மாணவச் சிங்கம்!
தனதென்று எதையும் ஒரு நாளும் எண்ணாதவனை
எனதென்று யார் வந்து எங்கு அழைத்துச் சென்றார்?
மண்ணுக்குள் மாணிக்கமாய் தோன்றிய மானுடனை
கண்ணும் கருத்துமாய் ஊன்றிப் படிக்கும் மாணவனை
பண்ணும் பரதமுமாய் இசைந்து வாழ்ந்த காலங்களை
எண்ணிப் பார்க்கையில் நெஞ்சு பதைபதைக்கிறதே - அந்த
விண்ணுக்குள் மின்னலென ஓடி நீ மறைந்தாயோ?
உங்கள் துயரில் பங்கு கொள்ளும்
மனடோர்வ் தமிழ்ப்பள்ளி, பள்ளிமுதல்வர்,
ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள்
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து