“மதி வதனா” பெயருக்கேற்ற குணவதியாய் தம் மகள் வாழவெண்ணி அழகிய இப்பெயரை பெற்றோர் சூட்டினாரா? - இல்லை சந்திரவட்ட உன் அழகிய முகமோ - அன்றி சாந்தமான நின் தோற்றமோ இவற்றைக் கண்டதும் இப்பெயரை மகவுக்குச் சூட்டினரா? எது உண்மை நாமறியோம் - ஆனால் பெயருக்கேற்ற குணவதியாய் வாழ்ந்துவிட்ட உன்னைமட்டும் நன்கறிவோம் மதிவதனா! உன் அழகிய அமைதியான தோற்றம் மென்மையான குரல் ஆர்வமுள்ள இசைப்பிரியை விருந்தோம்பும் உயர்பண்பு இவையெல்லாம் ஒன்றாகி எம்வாழ்வில் அறிமுகமாய் யாவரையும் கவர்ந்தவளே! மதிவதனா, காலனுன்னை அணுகுவதை அறியாத நண்பிகளாய் கடமையிலே மூழ்கிவிட்ட - நம் மடமைக்காய் வருந்துகிறோம்! இலண்டன் பயணம் வந்தபோது நண்பியரை ஒன்றுகூட்டி உன்வீட்டில் உபசரித்தாய் வதனா! வீட்டை அலங்கரித்த பூந்தொட்டிகளும் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்த அழகிய பாண்டங்களும் வர்ண வேலைப்பாடுகொண்ட வீட்டுச் சுவர்களும் - உன் (இ)ரசனைக்குக் கட்டியங் கூறினவே! கௌதம்மேல் நீ கொண்ட பாசத்தை நேரிலும், ஏன் zoom இலும் நிறையவே கண்டோம்! பதிவுசெய்த பாடல்களைப் பகிர்ந்தபோதும் உணர்ந்தோம்! கண் மலர்ந்து நீ சொன்ன கதைமூலம் கண்டறிந்தோம் கணவன் ‘றோகான்’ மேல் கொண்ட காதலினை! அவர் பிரிவால் உன்மனம் ஆற்றொணாத் துயர் உறுவதையும் - உணர்ந்தோம்! தனித்துன்னை (தவிக்க)விடாது தன்னுடன் சேர்த்ததாய் ஆறுகிறோம் வதனா! மண்ணில் பிறந்தவர் யாவரும் ஒருநாள் மரிப்பது உண்மையே! ஆயினும் உன் பிரிவை ஏற்கமனம் மறுக்கிறதே! எம்முள் ஒருத்தியாய் நீ வாழ்ந்த மகிழ்வான நாட்களை நினைவு கூர்ந்து நன்றிகூறி உன் ஆத்ம சாந்திக்காய் வணங்கும் பள்ளித்தோழி வித்தியா! 10D (10M) 29/08/2024
I’m deeply saddened to hear such news! Please accept my deepest condolences. Sarojini (school friend), UK