யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி மட்டுவில் தெற்கு துவாரகையை நிரந்தர வசிப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை பிற்கால வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பவளம் முத்தையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பைக் காட்டி, அறிவைப் புகட்டி...
அறுசுவையும் ஊட்டி அரவணைத்து வளர்த்து...
ஆலமரமாக அனைவர்க்கும் நிழல் அளித்து...
இன்முகம் காட்டி, இனியன பகர்ந்து...
இடித்துரைத்து.. நல்வழிகளை இடித்துரைத்து...
ஈசனவன் தாழ் தொழவைத்து...
ஈவிரக்கமென்றும், ஈகையென்றும்..
இன்னோரன்ன இனிய இயல்புகளை
இயம்பட எடுத்துரைத்து...
“உன் கடனை நீ செய், உலகத்தை நேசி..
“உன் கடனை நீ செய், உலகத்தை நீ நேசி”
என உதிரத்தில் ஊட்டி, ஊட்டி வளர்த்து...
உறவையும் காத்து, உலகையும் காத்து...
ஊரார் பிள்ளையையும் உன் பிள்ளை
என ஊட்டி வளர்த்த உத்தமியே...
எளிமையாக வாழ் என எடுத்தியம்பி...
ஏழைக்கும் இரங்கிக் கொடுத்துதவி...
ஐயந் திரிபடக் கற்று, ஆசான்கள்
பலரை ஆளாக்கிய ஆசிரியையே...
“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்” என ஒவ்வோர்
கணமும் எமக்கு ஒதி உணர்வித்து
“ஓடு மீன் ஒட உறுமீன் வருமளவும்”
எம் நல்வாழ்வுக்காகக் காத்திருந்து
உங்கள் வாழ்வு முழுவதுமே எமக்கென
அர்ப்பணித்த தியாகத் தீபமே...
ஔவைப்பாட்டி போல, முருகன் பால்...
வேரற்கேணி முருகன் பால் அன்பு கொண்டு...
குன்றின் மேலிட்ட தீபமாக, கலங்கரை
விளக்காக வாழ்ந்து, கண்ணிமைக்கும்
நேரத்தில், திடுதிப்பென எம்மையெல்லாம்
ஆறாத்துயரில் ஆற்றிவிட்டு, எங்கு
ஓடிச்சென்றீர் எம் அருமை அம்மாவே...
உங்கள் பிரிவால் அனுதினமும் வாடுகின்றோம்...
அலை கடலில் துரும்பானோம், ஆழ்
நெருப்பில் நெய்யானோம், சிறகிழந்த
பறவையானோம், சீறி நிற்கும் சிங்கம்
வாய்ப்பட்ட சிசுவானோம்..
ஏழேழு பிறவி நாம் எடுத்தாலும், எம் அருமைத்
தாயாக வாருமம்மா, எம் துயரைத்
தீருமம்மா...
நீங்கள் என்றென்றும் எம் நெஞ்சில்
நிலையாக வாழ்வீர்கள் என
ஆணித்தரமாக எடுத்தியம்பி
நாமனைவரும், உங்கள் ஆத்ம சாந்திக்காக
அனுதினமும் இறைவன் பால் வேண்டி, எம்மை
ஆசிர்வதித்து அருளுமாறு, உங்கள்
கமல பாதங்களில் வீழ்ந்து வணங்குகிறோம்
என்றும் உங்கள் பாசமான
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
A Mother is the Greatest Treasure in the World ! You're always fondly remembered !!