

எங்களுடைய அன்புத் தோழர் பத்மநாதன் குமார ரூபனின் இழப்பு அவரது குடும்பத்தார், உறவினர்க்கு மட்டுமல்ல, வகுப்புத் தோழர்களாகிய எங்களுக்கும் பேரிழப்பு. பள்ளிக் காலத்திலேயே மிகவும் கவர்ச்சியான தோற்றத்திற்கும், சுபாவத்திற்கும் எங்கள் ரூபன் சொந்தக்காரனாக இருந்தான். நாங்கள் மனச் சோர்வடைந்திருக்கும் நேரங்களில் ஔடதமாக மாறி காடு, மலை, கடல் என எங்களை இழுத்துச் சென்று உற்சாகமூட்டுவான். கல்வியில் அவனுக்கு உதவும்படி அவனது தாயார் வலியுறுத்தியபோது மறு பேச்சின்றி எங்களை குருவாகவும் பாவிக்கும் எளிமை அவனிடமிருந்தது. கர்வம், பொறாமை, இன்னாச்சொல் போன்ற சாதாரண மனித குணங்களைத் தாண்டி ஒரு பெருந்தன்மை அவனிடம் எப்போதும் குடி கொண்டிருந்தது. 1982-1983 காலத்தில் ஒன்றாக மாலைகளில் உலவித் திரிந்த நாங்கள் மீண்டும் 1990 களின் நடுப்பகுதியில் மீண்டும் தொலைபேசி உரையாடலில் எம்மை மீட்டுக் கொண்ட போது மிகவும் இயல்பாக தனது திருமணம் பற்றிக் குறிப்பிட்டான். “பயணம் எண்டு முடிவாயிட்டுது... சசிகலா வீட்டை போய் பயணம் சொல்லி என்னை கலியாணம் கட்ட விருப்பமா? எண்டும் கேட்டன்... சசி ஓமெண்டிட்டா! ஒரு மாதிரி வீட்டாரையும் சமாளிச்சு அவவை கூப்பிட்டு குடும்பமாயிட்டன்... என்றான். தன் போக்குகள் வாழ்க்கை வழிகளை நண்பர்கள் ஏற்றுக் கொள்வாரா.... மாட்டாரா.... என்றெல்லாம் அவன் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. கடைசியாக இலண்டன் வந்து பேசிக் கொண்டிருக்கையில் “ இலங்கை அரச விருந்தினராக நான் அழைக்கப்பட்டேன்... ஒரு பெரிய ஆமத்துரு, ஒரு ஆர்ச் பிஷப் இவர்களுக்கு சம்மாக என்னை உட்கார வைத்து மதிப்பாக நடாத்தினார்கள்... என்றான். நாங்கள் அழைக்க மறந்தாலும் தொலைபேசியில் அழைத்து அனைத்தையும் பகிரும் ஒரு அன்புள்ளத்தை, ஒரு மனச்சுமை போக்கும் மருந்தை நாங்கள் இழந்து மனங் கலங்கி நிற்கின்றோம். காலவெள்ளம் எங்களை துயரை அடுத்துச் செல்லும். உன் நினைவுகள் என்றும் வாழும் . சென்று எம் வகுப்பறையின் புன்னகையே!
to my childhood friend. From Kugan and family (UK)