Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 02 JUN 1945
இறப்பு 15 JUN 2023
அமரர் நாகேஸ்வரி கனகசிங்கம் 1945 - 2023 கரம்பன் மேற்கு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். ஊர்காவற்றுறை கரம்பன் மேற்கு அயித்தாம்புலத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், கொழும்பு சொய்சாபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி கனகசிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் வட பாகத்திலுள்ள யாழ்ப்பாணத்தில் வரலாற்றுச் சிறப்புடைய ஊர்காற்றுறையில் கிருஷ்ணபிள்ளை அன்னம்மா ஆகியோருக்கு முதலாவது புதல்வியாக அமரர் நாகேஸ்வரி அவர்கள் 02 - 06 - 1945 ஆம் ஆண்டு இப் பூவுலகில் அவதரித்தார். இவரது தந்தையார் கிருஷ்ணபிள்ளை சித்த ஆயுர்வேத மருத்துவராக "பரியாரி செல்லையா" எனும் பெயருடன் மேற்கு கரம்பன் அயித்தாம்புலத்தில் கடமையாற்றி வந்தார். இவரது சிறிய தந்தையார் "பரியாரி சுந்தரம்" 1950 களில் பிற பிரதேசங்களிலும் எல்லோராலும் அறியப்பட்ட புகழ்வாய்ந்த சித்த ஆயுர்வேத மருத்துவராவார். இவரது தாயார் அன்னம்மா தொன்மை வரலாற்றுச் சிறப்புடைய கந்தரோடையை பூர்வீகமாக கொண்டவராவார். இவர் தனது தாய் தந்தையர் அண்ணன்மார் தளையசிங்கம், சத்தியசீலன் தங்கை நிலேசலாதேவி (குஞ்சுமணி), தம்பி மகாதேவா ஆகியோருடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த காலத்தில் வருத்தம் காரணமாக தனது தந்தையை 5 வயதிலேயே இழந்தார். இவர் தனது ஆரம்ப கல்வியை கரம்பன் சண்முகநாத மகா வித்தியாலயத்தில் கற்று மேற்படிப்பை கரம்பன் சிறிய புஷ்ப மகளிர் மகா வித்தியாலயத்தில் தொடர்ந்தார். இவரது தாயார் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் இவரையும் இவரது சகோதரி சகோதரர்களையும் வளர்த்து வந்தார். மூத்த தமையனார் திருமணமாகி கொழும்பில் கடமையாற்றியபோது சிறிது காலம் அவர் குடும்பத்துடன் கொழும்பில் தங்கியிருந்தார். தனது இரண்டு அண்ணன்மாரும் கொக்குவிலில் திருமண பந்தத்தில் இணைந்ததால் சிறிது காலம் கொக்குவிலிலும் தங்கியிருந்தார். இவ்வாறான காலப்பகுதியில் தனது பத்தொன்பதாவது வயதில் வட்டுக்கோட்டையை சேர்ந்த ஓவசியர் தியாகராஜாவின் இரண்டாவது புதல்வர் கனகசிங்கம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மைத்துன மைத்துனியராக வாய்க்கப்பெற்ற புவனேஸ்வரி, பூபாலசிங்கம், திலகவதி, குணசிங்கம் ஆகியோருடன் நல்லுறவு பேணி வந்தார். தனது இல்லறத்தின் பயனாக ராஜ்குமார், ராஜ்மோகன், ராஜ்செல்வம், கார்த்திகா, ராதிகா எனும் மக்களைப் பெற்றெடுத்து இல்லற வாழ்வில் இன்புற்றிருந்தார். இவ்வாறான காலப்பகுதியில் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்ததினால் உருவாகிய பொருளாதார காரணிகளால் மிகவும் கவலை கொண்டிருந்தார். அக்காலப்பகுதியில் தனக்கு சகலவிதங்களிலும் உற்ற துணையாக இருந்த தனது இரு தமையன்மாரினதும் ஒன்றன்பின்னான இளவயது இழப்புகளால் மிகவும் நொடிந்து போனார். மீண்டும் துரதிஸ்ட்ட வசமாக தனது தங்கையின் மகன் கல்கிஸ்ஸ (மவுண்ட் லவனியா) கடலில் குளிக்கச்சென்றபோது நீரில் மூழ்கி இறந்தததால் மிகவும் துயரத்தில் ஆழ்ந்தார். கால ஓட்டத்தில் தனது பிள்ளைகள் திருமணபந்தத்தில் இணைய தனது பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக தனது காலத்தை போக்கினார். ஆனால் மீண்டும் பேரிடியாக 2011 ம் ஆண்டு தனது தங்கை புற்றுநோய்க்கு ஆளாகிய நிலையில் அவரையும் இழக்க நேரிட்டது. பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் வெளிநாட்டிலிந்து அடிக்கடி வந்துபோவதால் மீண்டும் மகிழ்ச்சியாக தனது வாழ்க்கையில் நகர்ந்து கொண்டிருந்தார். இப்படியாக காலம் ஓடிக்கொண்டிருந்த நிலையில் 2016 ம் ஆண்டு தனது கணவனை மாரடைப்பால் இழந்து கவலை கொண்டார். சிறிது காலம் சுகவீனமுற்றிருந்த தாயை மார்கழி 2019 இல் இழந்தது அவரை பெரிதும் வாட்டியது. அவரது வாழ்க்கையில் எப்போதும் இடர்களும், துன்பங்களும் சூழ்ந்திருந்தபோதும், மிகவும் உறுதியான இதயத்துடன் அமைதியாக தனது வாழ்வில் நகர்ந்து கொண்டிருந்தார். கடந்த 2023 பங்குனி மாதம் அவரது சகோதரிகள் போல் பழகிவந்த திரவியம், சறோஜினிமாலா போன்றவர்கள் புற்றுநோயால் அடுத்தடுத்து இறந்ததால் அமைதி இழந்து காணப்பட்டார். தனக்கு நெருக்கமானவர்களை தான் இப்படியே இழந்து கொண்டிருப்பது தனக்கு ஏதோ செய்வதுபோல் உள்ளதாக அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தார். இப்படியான காலத்தில் முழங்காலில் ஏற்பட்ட தேய்வு காரணமாக செயற்கை முழங்கால் மாற்றீடு சித்திரை 2023 இல் செய்துகொண்டார். ஆனால் சத்திரசிகிச்சையின் பின் ஏற்பட்ட பாக்டீரியா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வரும் போது, பாக்டீரியா தாக்கத்தால் நுரையீரல், சிறுநீரகம் ஆகியவை பாதிக்கப்பட்டு மாரடைப்பால் கொழும்பு றோயல் வைத்தியசாலையில் 15 - 06 - 2023 வியாழக்கிழமை அதிகாலை எம்மை விட்டு பிரிந்து இறைவனடி சேர்ந்தார்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 13 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.