யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு இரகுபாலன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.
அறிவும் ஆற்றலும் நிரம்பிய ஆளுமையின் அத்தியாயம் ஒன்று மெல்லச் சரிந்தது. தமிழ்க் கல்விச் சேவையின் அலுவலகப் பணிகள், அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் அலுவலகப் பணிகள் ஆகியவற்றில் சிறிது காலங்கள் சேவை அடிப்படையில் (எவ்வித கொடுப்பனவுகளும் இல்லாமல்) இணைந்து பணியாற்றிய திரு. முருகேசு இரகுபாலன் அவர்கள் கடந்த 25.03.2026 அன்று உடல்நலக் குறைவு காரணமாக காலமாகிவிட்டார் என்ற பிரிவுச்செய்தி அறிந்து ஆழ்ந்த துயரடைகின்றோம்.
அமரர் முருகேசு இரகுபாலன் அவர்கள் சைவத்தின் மீதும், தமிழ் மொழியின் மீதும் அளவுகடந்த பற்றினை கொண்டிருந்தவர். தாவரங்கள், பறவைகள், வன விலங்குகள் உள்ளடங்கிய இயற்கை வளங்கள் மீதும் அதிக அக்கறையுடன் செயற்பட்டவர். தாயகத்தில் இயற்கை வளங்களினை பாதுகாப்பதற்காக தன்னால் இயன்ற நிதி பங்களிப்புக்களினை வழங்கியவர். தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக சுவிற்சர்லாந்தில் நடைபெறுகின்ற ஊர்வலங்கள், வணக்க நிகழ்வுகளிலும் ஆர்வத்துடன் தமிழீழ கொள்கைப் பற்றாளனாக கலந்துகொள்பவர்.
சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் அமைந்திருக்கும் பறவைகள், விலங்குகள் காப்பகத்திலும் சிறிது காலங்கள் சேவை அடிப்படையில் பணியாற்றியவர். அறிவுபூர்வமான ஆராய்ச்சிகளுடன் இயற்கை, பறவைகள், வனவிலங்குகள் தொடர்பான நூல்களினையும் எழுதி வெளியிட்டவர். சூரிச் அருள்மிகு சிவன் ஆலய ஆரம்பகால உருவாக்கத்தின் போதும் சிவ பக்தனாக முன் நின்றவர்.
தமிழ் எங்கள் மொழி, சைவம் எங்கள் வழி என்னும் வாசகத்தினை ஆணித்தரமாக எடுத்துரைத்தவர். தூய்மையான சிந்தனைகளுடன் எல்லோரிடத்திலும் அன்பாகப் பழகி சைவத்திற்கும் தமிழுக்குமாக வாழ்ந்து மறைந்த அமரர் முருகேசு இரகுபாலன் அவர்களுடைய ஆத்மா அமைதியடைய பிரார்த்திப்பதுடன் அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அமரர் முருகேசு இரகுபாலன் அவருடைய இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 02.04.2026 வியாழக்கிழமை அன்று காலை 09:00 மணி தொடக்கம் 13:00 மணி வரை Krematorium Nordheim, Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland எனும் முகவரியில் நடைபெறவிருக்கிறது.