

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், நெடுந்தீவு, லண்டன் Norbury ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மேரிதிரேசா றோசலின் ஆரோகணம்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா!
தாயாகும் வரை உன் தாய்மை நாம் உணர்ந்ததில்லை.
உயிர் கொடுத்து, உளமதன் அன்பு கொடுத்து, உயர் நெறி கொடுத்து,
நிலவின் தண்மையோடு வாழ்ந்துசென்றாய்.
சீதைக்கு இராமன் போகுமிடமெல்லாம் அயோத்தியாமே!
கண்டேன் கொண்டேன் என்று அப்பா சொல்வார்.
அவருக்கு வேலை இடமாற்றம் வந்தபோதெல்லாம் அவரோடு நீ
காடுகளனியென வன்னியெல்லாம் நடந்தாய் குழந்தைகளோடு,
பின் நெடுந்தீவில் வருடங்களென குடியிருந்தோம்.
கோடை வெய்யிலில் புழுதி எறியும் வெளி, வறண்டு கிடக்கும் கிணறு,
கல்லடித்து நகம் கிழிக்கின்ற தெரு, முள்ளாய் நிறைந்த நிலமுமாய்
இருந்த மண்ணை எங்கனம் நீ அணைத்தாய்.
கொண்டவனின் ஊரதனால் உனக்கு உப்பு தண்ணி நன்னீராச்சு,
முள்ளும் கல்லும் மெத்தையாய் ஆச்சு.
உன்கைப்பட்டு
கூழும் ஒடியல்பிட்டும் தனிச்சுவை பெறும்,
அம்மண்ணின் இலைகளும் கிழங்குகளும் அருஞ்சுவையாகும்.
உற்றமும் சுற்றமும் உறவுகளும் தம் நெஞ்சில்
நிறைத்தார் உன்னை.
பாகுபாடு இல்லை உன் அன்பில்.
உன்னால் மனம் நொந்தார் யாருமில்லை.
நீ வெறுத்தார் யாருமில்லை.
பஞ்சமும் வெஞ்சினமும் தந்த அரசைத் தவிர.
வானம் திறந்து மழைபொழிந்த நாளொன்றில்
முற்றத்தில் ஒரு தாய்க்கோழி
சிறகுக்குள் குஞ்சுகளனைத்தையும்
மூடிக்காத்து தான்நனைந்து நின்றதை
நினைத்தபோது...
உன்நினைவு.
நீ ஒரு அடைக்கலம்!
தாயன்புக்கு ஈடேது!
எல்லை எது !
மூச்சடங்கும் வேளையிலும் உன்விரல்கள் செபமாலை வருடின.
ஐப்பசி மாதம் செபமாலை மாதம்.
மரணவேளையிலும் மாதாவை வேண்டக்கேட்டாய்.
மூப்பு வந்து மூச்சு போனால்
அது உதிர்ந்து வீழ்ந்த இலை போலாகிடுமா.
காலத்தில் உனது வாழ்வு உன்னதமானது.
உன்னுயிர் தொடர் உயிராய் கடந்து செல்லும்.
மண்ணை அது இன்னும் இன்னும் அழகாக்கும்.
Rest In Peace dear அம்மா.