
யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கைப் பிறப்பிடமகாவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த குமாரசாமி சிறீகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வல்லிபுர வைத்தியர் என எல்லோராரதும் அன்புக்கு பாத்திரமானவர் குமாரசாமி சிறீகரன் அவர்கள் ஆவார். இந்து மகா சமுத்திரத்தின் முத்தெனத் திகழும் ஈழவளநாட்டின் வடபால் சைவமும், தமிழும் தழைத்தோங்கும் பருத்தித் துறையின் புலோலி வடக்கு என்னும் பட்டினத்தில் குமாரசாமி லட்சுமிப்பிள்ளை தம்பதிகளுக்கு ஏழாவது பிள்ளையாக 1949-07-14 ஆம் திகதி அன்று பிறந்தார்.
வைத்தியத்துறையில் பிரபல்யம் பெற்ற வைத்தியர் வல்லிபுரம் அவர்களின் செல்ல பேரனாகவும், வைத்தியர் குமாரசாமி அவர்களின் மூன்றாவது மகனாகவும் பிறந்த இவரை பெற்றோர் உரிய வயதில் கல்விக் கடலில் சங்கமிக்க வைத்தனர். தனது ஆரம்பக் கல்வியை வல்வை சிதம்பராஜ் கல்லூரியிலும், இடைநிலை மற்றும் உயர்கல்வியை(யா/பரி.யோவான் கல்லூரியிலும்) கற்றார்.
1976ஆம் ஆண்டு வங்கித்துறைக்கு தெரிவு செய்யப்பட்டு மக்கள் வங்கியில் அலுவலராக பணிபுரிய கிடைத்தது. தனது கடமையை சிறப்புற சேவையாற்றிக் கொண்டிருந்த வேளை தந்தையாரின் வேண்டுகோளுக்கிணங்க ஆயுள் வேத வைத்தியத்துறையை உரிய முறையில் கற்று தேர்ச்சி பெற்று சேவையாற்றி வந்தார்.
இவரது 34 ஆவது வயதில் ஆனைக்கோட்டையை சேர்ந்த கந்தசாமி பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியாக வசந்த நாயகியை 1984-05-02 ஆம் திகதி அன்று கரம் பிடித்தார். இவர்களின் இல்லற வாழ்வின் பயனான நிசாந்(தொழில்நுட்ப உத்தியோகத்தர்- மாவட்ட செயலகம் முல்லைதீவு), பிரசாந்(வணிக துறை பட்டதாரி- யாழ்ப்பாணம்) என்னும் புத்திரச் செல்வங்களை பெற்றெடுத்தனர்.
பிள்ளைகளும் கல்வி முடித்து நற்பதவிகளில் வேலையிற் சேர்ந்த வேளைமூத்த புத்திரனும் நவ வித்தியா என்றும் உகந்த வாழ்க்கை துணையைத் தேடி கொடுத்து மணமுடித்து வைத்தார். அவர்களின் இனிய இல்லற வாழ்வின் பயனாக மதுமிகா எனும் பேரப்பிள்ளையை கண்டு களித்தார்.
மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறை மாணவர்களுக்கு துணைவேந்தரின் வேண்டுகோளுக்கு இணங்க வருகை செய்முறையாளராகவும்(Visiting Demonstrator) பணிபுரிந்து அவர்களின் வளர்ச்சிக்கு உதவி புரிவதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
70 வருட மண்ணுலக் வாழ்வையும், 36 வருட இல்லற வாழ்வையும் கடந்து இரு வருடங்களாக நோய்வாய்ப்பட்டு 03-08-2019 சனிக்கிழமை காலை 5.15 மணிக்கு இம் மண்ணுலக வாழ்வை நீத்து விண்ணுலகம் சென்றார்.
அமரர் குமாரசாமி சிறீகரன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!