வவுனியாவைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருபைநாதன் சண்முகம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
நமச்சிவாய வாழ்க
நாதன் தாழ் தான் வாழ்க!!!
சிலுவைகளை நீ சுமந்து
மாலைகளை எமக்குச் சூட்டினாய்!
கெட்டுப்போன பாவியான
கிருபை செய் நாதனே என்று அம்மா
கூறிய உடன் அம்மாவின் வார்த்தைக்கு
மறுவார்த்தையின்றி எல்லோருக்கும்
என்றுமே அள்ளி வாரிடும் வள்ளல்
என் அண்ணாகிருபை நாதனே...
எமது குடும்பத்தின் நாலாவதாய்
வந்துதித்து நம்மவர்க்கு நன்மையே
செய்து வந்த - என்னருமை அண்ணாவே
எங்கு சென்றாய் எம்மை விட்டு...
காலனவன் அழைப்பையேற்று
எம்மைக் கண்ணீரில் மூழ்க வைத்து
கனிவுடனே எம் அம்மாவிடம்
விரைந்து நீர் சென்றீரோ...
அண்ணா...உம்மை நான் புகழ
இங்கு வார்த்தைகள் போதவில்லை!
நீங்கள் செய்த நன்மைகளோ
கடலளவு - அதில் எவற்றை நான்
இங்குரைப்பேன்! இருந்தும் என்
இதயமதன் உந்துத்தால்
சிலவற்றைக் கூறுகின்றேன்....
எமது குடும்பத்தில் ஆறாவதாகவும்
கடைசிப்பிள்ளை மட்டுமல்லாமல்
நாதன் அண்ணாவிற்கு
13 வயது இளையவளாகவும்
பிறவியிலேயே ஒரு கையில்லாமலும்
பிறந்தவள் தான் நான்...
இருப்பினும்...
எனது கை பற்றி
சிறிதும் கவலையில்லாமல்
வளர்ந்தேன் வாழ்கிறேன்...
என்றால் அதற்கு முக்கிய
காரணமாகவும் முக்கிய நபராகவும்
திகழ்ந்தவர் எனது அன்பும்
பாசமும் நிறைந்த என்னருமை
கிருபை நாதன் அண்ணா தான்!!!
அம்மா...அப்பாவிற்கு... அடுத்த
தெய்வமாகவும் என் வாழ்வின்
ஒவ்வொரு படி முயற்சியிலும்
எனக்கு உறுதுணையாக
எந்நாளும் என் வாழ்வில்
எனக்குக் கை கொடுத்து
என்னை நிலைப்படுத்திவிட்ட
என்னருமை அண்ணாவே...
வளர வளர நான்
கையில்லாத மாதிரி
இந்த உலகத்திற்கு
தெரியக் கூடாது என்று
இந்தியா கூட்டிச் சென்று
fake கை செய்து தந்து
இரண்டு கைகளுடன்
என்னை அழகு பார்த்து
நீர்! ஆனந்தமடைந்த அந்நாளை
எண்ணிக் கதறுகிறேன் இன்று...
இன்னும் கனடாவிற்கென்னை
அழைத்து கனிவுடனே
எனைப் பார்த்து கல்யாணம்
தனைத்தேடி எனக்கு
மணவாழ்க்கை தனையமைத்து
களிப்புடனே நான் வாழ
காரணமாய் அமைந்திட்ட
என்னருமை அண்ணாவே...
உன்னை எண்ண என் இதயமது
வெடிக்குதெல்லோ!!!
இதுமட்டுமா....
எம் குடும்பத்தின் உற்ற தூணாய்
எல்லோர்க்கும் நல் வழி காட்டியாய்
அனைவரது நலனிலும்
அக்கறையாய் தோளோடு தோள்
கொடுத்து எம் அனைவரையும்
உயர்நிலைப்படுத்திவிட்ட
என்னுயிர் அண்ணாவே
எங்கு சென்றாய் எம்மை விட்டு....
அண்ணா உங்களை நான்
எத்தனை நாள் நோகடித்தேன்
நீர்! என்றேனும் என் மனதை
நோகடிக்கச் செய்தீரோ???
அத்தனையும் அக்கணமே
மறந்து விட்டு மகிழ்ச்சியினால்
என்றும் என்னை நிறைத்துள்ளீர்...
அண்ணா! ஈடு செய்ய முடியாது
உங்களது இழப்பால்
என் இதயமது வெடிக்கின்றது...
ஈன்ற தன் பிள்ளையை இழந்த
அவ்வேதனையால் தாங்கொனாத்
துயர் கொண்டு தான்
கட்டை ஏறினீரோ!!!
எள்ளளவும் எம்மை நீர்
எண்ணித்தான் பார்த்தீரோ
எப்படி நாம் தேற்றிடுவோம்
எம்முள்ளமதன் வேதனையை....
உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்காதென்னுமந்த
உண்மையை உங்கள் மூலமாக
அறிகிறேன் அண்ணா...
எம் வாழ்வில் கர்ணனுக்கு
அடுத்ததாக நீங்கள் தான்
பாசத்தாலும் கொடையாலும்
சிறந்தவன்...உங்களுக்கு நிகர்
நீங்களே அண்ணா!!!
அதை எவராலும் நிரப்ப முடியாது
உங்களைப் போல் ஒரு அண்ணா
எனக்கு இனிக் கிடைத்திடுமோ???
சுயநலத்தைத் தான் மறந்து
பிறர் நலத்தைக் கருதியதால்
உழைத்தவையத்தனையும்
உயர்வு தாழ்வு பாராது
அள்ளியள்ளிக் கொடுத்த
என் கொடைவள்ளல் அண்ணாவே...
இறைபக்தி உன்னைத் தூண்ட
ஈடிணையற்று நீ
அயராது கொடுத்தாயே...
அந்த அந்தோனியார் ஆலத்தில்
பக்தர்கள் வழிந்தோடிப்
பக்தியோடு வழிபட
கோடான கோடி ரூபாய்
அக்கட்டிட நிதிக்காக
அந்த மனிதர் அதை மறந்திடுவர்
ஆனால் ஆண்டவனும் மறப்பானோ....
இன்னும்...
சகாய அன்னையைத் தாயாக
எண்ணி நீயும் தளராது இறைத்தாயே
அந்தத் தாயவள் ஆலயத்தின்
தரமான கட்டிட நிதிக்காக
கொடுத்தார்க்குக் குறைவில்லை
இதை யாரேனும் மறுப்பாரோ!!!
எனது பலமே...
நீங்களும் அம்மாவும் தான்
இருவரும் என்னை விட்டுச்
சென்றதால் வேதனையில்
மூழ்கி விட்டேன்!!!
ஏனிந்த நிலையெனக்கு
என்னதான் தீங்கு செய்தேன்
இனி ஆறுதலென்றடைய
யாரை நான் அண்டிப் போவேன்
தேறுதல் சொல்லியாற்ற
தெய்வமும் எனக்குண்டோ....
இருப்பினும் இறைவனது
நியதியை மாற்றிட
யாரு முண்டோ விதியது
உனக்கென்றால்
வேதனை எமக்குத் தானே
என்றெண்ணி வாழுகின்றேன்...
இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்!!!
உங்களது ஆத்மா நித்திய
இளைப்பாற்றியில் தேறுதலடைய வேண்டி!!!