யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டை 1ஆம் யூனிற்றை வதிவிடமாகவும், பிரான்ஸ் Évry ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா இராசலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி
அன்பான அழகிய இதயம் கொண்ட அப்பாவே
தம்பி சொன்னான் அப்பாவுக்கு ஓர் கவிதை எழுது என்று
கவிதைக்கே ஓர் கவிதையா?
முடியுமா? முடியவில்லையே! அப்பா!
உள்ளம் விம்மி கண்கள் கண்ணீர் சொரிகிறது அப்பா!
பொய்யான மெய்யோடு மெய்யான வாழ்வு வாழ்ந்தவரே!
ஆண்டுகள் ஐந்து கடந்து விட்டதாம் இல்லவே இல்லை!
நித்தம் நித்தம் நிழல் போல் எம்மை தொடர்ந்து
எம்மோடு இருப்பவரே !
"பிள்ளைகள் நீங்கள் என்னசெய்கிறீர்கள்......"
என்று கேட்டு நிற்கும் தேன் கலந்த இனிய ஒலி
எம்செவியில் விழுந்து பல வருடம் கடந்து விட்டதுவே!
சிலேடையணியில் பகிடிக் கதைகள் பல பேசி கவலைகளை
பறந்தோடச் செய்யும் வித்தையைக் கேட்க மனம் ஏங்குதப்பா
அதித பற்று பாசத்தில் சித்தம் கலங்கி நிற்பது வாழ்வில்
நடிப்பில்லை உண்மை என்று வாழ்ந்து உறுதி செய்தவரே!
உம் இதயத்தில் இடம்பிடித்த இல்லால் மீது கொண்ட பாசத்தை
எழுத வார்த்தையே இல்லை ! புகுந்த வீட்டு உறவுகளோடு
நீங்கள் கொண்ட பாசமே அதற்கு சாட்சி!
பொய் புளுகு பித்தலாட்டம் போட்டி பொறாமை இல்லாத
கறுப்புப் பளிங்கு வைரம் அப்பா நீங்கள்!
அடக்கம் அமரருள் உய்க்கும் அன்புடையோன் என்பும் உரியர்
பிறருக்கு என்ற மந்திரத்தில் கட்டுண்ட மாணிக்கம் அப்பா நீங்கள்!
காடுவெட்டி களனியாக்கி எங்கள் வயிற்றுப் பசி அறிவுப்பசி
இரண்டுக்கும் தீனி போட்டவரே!
தோட்டம் துரவு கடந்து
தோளில் சுமந்து கல்வி கற்க பள்ளி
விட்டு மாலையானதும் பாதிவழியில் வந்து பதினைந்து
வயதிலும் துள்ளி குதித்து தூக்கி தட்டாமாலை
சுற்றியதெல்லாம் எமக்கு எதுவும் ஈடிணை இல்லையப்பா!
தனக்கு பின்தான் தானம் என்பதை மாற்றி தானதர்மத்துக்குப்
பின்தான் நாம் என்பதை வாழ்ந்து ஊட்டியவரே!
மூத்தவள் நீ போகும் பாதையில் இளையவர் அரங்கேற்றம் என
அடிக்கடி இயம்பி கடமை கண்ணியத்தில் வழுவாது முன்னேற
வைத்த தெய்வம் நீங்கள்!
காலம் கடந்தாலூம் நீங்கள் நேசித்த உறவுகள்
உங்கள் வாசத்தோடு நினைவுகளை சுமந்த வண்ணம் கலங்கி நிற்கின்றோம்
எங்கள் அருமை அப்பாவே!
எங்களைப் பிரிந்த உங்கள்
ஆத்மா
அமைதி அடையட்டும்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி